தமிழகம் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 2010ம் ஆண்டுக்குள் தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக அறிவித்திட தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகள் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்படும் மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குழந்தை தொழிலாளர் அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது வழங்கினார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய சிறப்புப்பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய கையேடு மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியிட்டார்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார்.