13 வயது சிறுமியை கற்பழித்து சென்ற வாலிபருக்கு தூக்குத் தண்டனை அளித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கூலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் சந்தியா (13). இவர் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (34) என்பவர் சிறுமியை சந்தியாவை கடத்தி சென்று கற்பழித்து கொன்றார். இது குறித்து சந்தியாவின் தந்தை விஸ்வநாதன் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி கே.தட்சிணாமூர்த்தி அளித்த தீர்ப்பில், தன்னால் எதிர்த்து போராட முடியாத அப்பாவி 13 வயது சிறுமியை கடத்தி சென்று கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார் கற்பழித்து கொலை செய்துள்ளார்.
எதிர்காலத்தில் இது போன்ற கொடூரமான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் பெண் சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க குற்றம் சாட்டப்பட்ட செந்தில் குமாருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அப்பீல் செய்ய செந்தில்குமாருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மகளிர் நீதிமன்றத்தில் கொலை, கற்பழிப்பு வழக்கிற்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை.