நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினால் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டுக்கு தினமும் 8,700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதில், 1200 மெகாவாட் மட்டுமே நெய்வேலியில் இருந்து வழங்கப்படுகிறது. வேலை நிறுத்தம் காரணமாக அவர்கள் மின்சாராம் தராவிட்டாலும் கூட தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காற்றாலைகள் மூலமாக 1300 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. அந்த மின்சாரத்தை வினியோகிப்பதால் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது.
தட்பவெப்ப நிலை சாதகமாக இருப்பதால் கோவை, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காற்றாலை மூலமாக 5100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினருடன் மத்திய அரசு சார்பாக வரும் 13ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அதில் நல்ல முடிவு காணப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க, மத்திய மரபுசாரா எரிசக்தி அமைச்சகம் ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்தால் ஒரு யூனிட்டுக்கு 12 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க முடிவு செய்துள்ளது. எனவே, சூரிய ஒளி மூலமாக 10 மெகாவாட் வரை மின்சார உற்பத்தி செய்ய யாராவது முன்வந்தால் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.