வைகோ தலைமையிலான அணியே உண்மையான ம.தி.மு.க. என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ம.தி.மு.க. நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து எல்.கணேசன், செஞ்சி ந.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. பின்னர் இந்த வழக்கு குறித்த இறுதி தீர்ப்பை வெளியிட்டது.
இரு தரப்பு (வைகோ, எல்.கணேசன்) வாதங்களை கவனமாக கேட்டு, தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும், சாட்சியங்களையும் ஆய்வு செய்ததில் அமைப்பு ரீதியாக எண்ணிக்கை அடிப்படையிலும், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரிவுகளின் பெரும்பான்மை ஆதரவு வைகோ தலைமையிலான அணிக்கு இருப்பதால், அவர் தலைமையிலான ம.தி.மு.க.வே உண்மையான ம.தி.மு.க. என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.
இதை கருத்தில் கொண்டு, வைகோவை பொதுச்செயலாளராக கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 'பம்பரம்' சின்னத்தை உபயோகிக்கும் அனைத்து உரிமையையும் பெறுகிறது.
இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்து இருப்பதாக ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.