வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- அ.இ.அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கும்மிடிப்பூண்டியில் ஏராளமான ஆயுதங்கள் கிடைத்திருக்கிறது. இதற்கும் தீவிரவாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். நக்சலைட்டுகள், மாவோயிட்டுகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. ஆயுத கடத்தலில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் மேலும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியும், அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. பிரதமராக அத்வானியை ஏற்றுக் கொள்ள முன்வரும் கட்சிகளோடு தான் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்கும். அத்தகைய உணர்வுள்ள கட்சிகள் வந்தால் அவர்களை வரவேற்போம் என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.