இந்தியாவில் முதல் முறையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளரின் கணவர் அல்லது மனைவி, மகன், மகள் ஆகியோர் பயன் பெற தகுதி படைத்தவர்கள்.
இத்திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேரும் பணியாளர்கள் சிகிச்சை பெறும் போது, அவர்களுக்கு மருந்து செலவினங்கள்; லெப்ராஸ்கோபிக் அல்லது திறந்த அறுவை சிகிச்சைச் செலவினங்கள், மருத்துவர்கள் மற்றும் உதவியாளர் தொடர்பான கட்டணங்கள், தங்கும் அறை கட்டணம், பரிசோதனைகள் மற்றும் உணவுக் கட்டணம் ஆகியவற்றைப் பெறுவர்.
புதிய இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டுகளைக் கொண்ட ஒரு தொகுப்புக் காலஅளவிற்கு 2 லட்சம் ரூபாய் வரை அரசுப் பணியாளர் தனக்கு மட்டுமோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தோ பணச் செலவின்றிச் சிகிச்சைகள் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அரசுப் பணியாளருக்கும் மாதம் ரூ.25 வீதம் ஆண்டுக்கு ரூ.300 என அவரது 2008 ஜூன் மாத ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. ஒரு பணியாளருக்கு ஆண்டுக் காப்பீட்டுத் தொகையாக ரூ.495ம், 12.5 விழுக்காடு சேவை வரியும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
இத்தொகையில் அரசுப்பணியாளர் தனது பங்காக மாதம் ரூ.25 வீதம் 12 மாதங்களுக்கு செலுத்தும் ரூ.300 போக, மீதத் தொகையாகிய 195 ரூபாயுடன், 12.5 விழுக்காடு சேவை வரி முழுவதையும் தமிழக அரசே அரசுப் பணி யாளர்களுக்காகக் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலு முள்ள ஏறத் தாழ 300 மருத்துவமனைகளில் 52 வகையான நோய்களுக்குச் சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் செய்து கொள்ள முடியும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.