''சிப்காட் தொழில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டா வழக்கில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை'' என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் கிராமத்தில் ஜூன் 7ஆம் தேதி சிப்காட் தொழில் வளாகத்திற்குள் 150 கிலோ துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
அவற்றைப் பரிசோதித்ததில் 1917 முதல் 1967ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை என்றும், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும் தெரியவந்தது.
சிப்காட் வளாகத்தில் வெளிநாட்டில் இருந்து இரும்பு கழிவுப் பொருள்களை (ஸ்கிராப்) இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி கம்பிகளாக மாற்றி விற்பனை செய்துவரும் 14 ஸ்டீல் கம்பெனிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் "விநாயகா அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தில் புதைத்து வைத்திருந்த பழைய துருப்பிடித்த ஷெல்கள் (80), பயன்படுத்திய பழைய துருப்பிடித்த தோட்டாக்கள் (சுமார் 50 கிலோ) ஆகியவற்றைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக, மேலாளர் மனோஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் மிகவும் பழமை வாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டவை என்பதால், அவை தற்போது பயன்பாட்டிற்கு ஏற்றவை அல்ல. எனவே, இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளார் காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின்.