நூல் விலை உயர்வைக் கண்டித்தும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரியும் ஈரோட்டில் இன்று கைத்தறி துணி வணிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த தொழிலுக்கு அடிப்படை தேவையான நூல் விலையில் கடும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ரூ.25 முதல் ரூ.60 வரை விலை ஏறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பஞ்சு ஏற்றுமதி என கருதப்படுகிறது.
ஆகவே மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து நூல் விலையை குறைக்க வேண்டும், ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் இன்று ஜவுளி பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.