சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திரு.வி.க.நகர், விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய புதிய சட்டமன்ற தொகுதிகள் உருவாகி உள்ளன.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சிறப்பு ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில். சென்னை மாவட்டத்தில் உள்ள 155 கோட்டங்களும், தொகுதி மறு சீரமைப்பு உத்தரவு 2007-ன்படி சென்னை கோட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற எல்லைக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. 3 நாடாளுமன்ற தொகுதிகளாகவும், 16 சட்டமன்ற தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு:
வட சென்னை பாராளுமன்ற தொகுதியில், எண்-10 திருவொற்றியூர், எண்-11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், எண்-12 பெரம்பூர், எண்-13 கொளத்தூர், எண்-15 திரு.வி.க.நகர் (தனி), எண்-17 ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில், எண்-22 விருகம்பாக்கம், எண்-23 சைதாப்பேட்டை, எண்-24 தியாகராயநகர், எண்-25 மைலாப்பூர், எண்-26 வேளச்சேரி, எண்-27 சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில், எண்-14 வில்லிவாக்கம், எண்-16 எழும்பூர் (தனி), எண்-18 துறைமுகம், எண்-19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, எண்-20 ஆயிரம் விளக்கு, எண்-21 அண்ணாநகர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றுள் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியும் முறையே திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவையாகும். மேற்கண்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவின்படி புதிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று (10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த வரைவு வாக்குச் சாவடி பட்டியல், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
வாக்காளப் பெருமக்கள் இதனை பார்வையிட்டு 16.6.2008-க்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கோரப்படுகிறார்கள். குறிப்பிட்டுள்ள தேதிக்கு பிறகு வரும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.