நடிகர் கார்த்திக் 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கட்சியில் இருந்து விலகி விட்டதாக கார்த்திக் அறிவித்தார். பின்னர் புதிய கட்சி ஒன்றை விரைவில் தொடங்கப் போவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் புதிய கட்சியை நேற்று நடிகர் கார்த்திக் திடீரென தொடங்கினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவம் பொறித்த சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறம் கொண்ட கட்சிக் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், எங்கள் கட்சிக்கு `அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' என்று பெயர் வைத்திருக்கிறோம். எங்கள் கட்சி ஜாதிக் கட்சி அல்ல. அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடுவோம்.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கட்சி தொடங்கியுள்ளேன். எல்லோரும் கட்சியை தொடங்கியதும் முதலமைச்சர் ஆவேன் என்று கூறுகிறார்கள். எங்களுக்கு அந்த ஆசை இல்லை. எங்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு நெல்லை அல்லது மதுரையில் நடைபெறும். மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக நான் இருப்பேன். 12 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதர நிர்வாகிகளும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.