"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பாதுகாப்பு வழங்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2001 முதல் 2006 வரை வழங்கப்பட்டு வந்த `இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டது.
எனக்கு விடுதலைப்புலிகள், பல்வேறு தீவிரவாத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் உள்ளது. எனது வீட்டை சுற்றி மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. எனவே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு வழங்கப்பட்டது போல `இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்க உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு
குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழக்கப்படும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா பாதுகாப்பு குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
2 வாரத்துக்குள் ஆய்வு தொடங்கப்பட வேண்டும். பின்னர் இதற்கான அறிக் கையை பாதுகாப்பு மறு ஆய்வு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய முதலமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்கவில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.