சுய நிதி பொறியியல் கல்லூரிகளுக்கான தமிழக அரசு அறிவித்திருந்த கல்விக் கட்டணத்தை ஏற்க முடியாது என்று சுய நிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
"பொறியியல் கல்லூரிகளில் தேசிய அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு உள்ள கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு வருடத்திற்கு கல்வி கட்டணம் ரூ.75 ஆயிரமும், தேசிய அங்கீகாரம் பெறாத பிரிவு கொண்ட கல்லூரியில் படிக்க மாணவர்களுக்கு ரூ.67 ஆயிரமும் நிர்ணயிக்க வேண்டும். அதுவும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும், அரசு ஒதுக்கீட்டுக்கும் ஒரே கட்டணமாக இருக்க வேண்டும் என்று நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் குழுவிடம் நாங்கள் 6 மாதத்திற்கு முன்பே அறிக்கை அளித்தோம்.
அதன்பிறகு கடந்த 2 வாரத்திற்கு முன்பு எங்களை நீதிபதிக் குழு அழைத்து பேசியது. ஆனால் இறுதி முடிவு எடுக்கும் போது எந்தவித அறிவிப்பும் இன்றி எங்களிடம் கலந்து பேசாமல் முடிவுகளை தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
அரசு ஒதுக்கீடு 65 விழுக்காடும், நிர்வாக ஒதுக்கீடு 35 விழுக்காடும் என்ற இடஒதுக்கீட்டையும் கூட்டமைப்பு ஏற்கவில்லை. நிர்ணயித்த கட்டணத்தையும் ஏற்கவில்லை.
இதுபற்றி உடனே எங்களை அழைத்து பேச வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் கொடுத்து உள்ளோம். குழு அறிவித்துள்ள கட்டணம் இரு ஒதுக்கீட்டையும் சராசரி செய்து பார்த்தால் ரூ.42 ஆயிரம் தான் வருகிறது. நாங்கள் கோரிய கட்டணத்தைவிட 25 ஆயிரம் குறைகிறது.
கேரளாவில் 50 - 50 இட ஒதுக்கீடு. அரசு ஒதுக்கீட்டுக்கு மாணவர் ரூ1 லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் கட்டவேண்டும். ரூ.17,500 கட்டணம் செலுத்தவேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.75 ஆயிரம் கட்டணம் ஆகும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரூ.1 லட்சம்.
கர்நாடகாவில் 45 - 55 இட ஒதுக்கீடு ஆகும். அரசு ஒதுக்கீட்டில் ரூ.25ஆயிரமும் நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.75 ஆயிரமும் கட்டவேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம். அங்கு சராசரி ரூ.72 ஆயிரம் வருகிறது.
எங்களுக்கு இந்த ஆண்டு நிர்ணயித்த கட்டணம் போதாது. ஒரு படிப்பு தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவுக்கு ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. அதே படிப்புக்கு அங்கீகாரம் பெற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டவேண்டும். ரூ.25 ஆயிரம் ஆய்வு கட்டணம் செலுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு மாணவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.
கருத்தரங்கு நடத்த, தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல, மாணவர்களுக்கு மேலாண்மை, திறன் மேம்பாடு ஆகியவற்றை கவனிக்க நிறைய பணச் செலவு ஏற்படுகிறது அதனால் இந்த புதிய கட்டணம் போதாது.
மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கல்லூரி தொடங்க வேண்டும். உடனே அமைச்சர் பொன்முடி எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதுகுறித்து அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அழைத்து பேசுவார் என்று கருதுகிறேன்." என்றார்.