வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடை அடைப்புப் போராட்டம் நடக்கும் என்று அப்பேரவை அறிவித்துள்ளது.
சென்னை பெரம்பூர் வியாபாரிகள் நலச்சங்க அலுவலகத்தில் நடந்த வணிகர் சங்கங்களின் பேரவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில், "தமிழகம் முழுவதும் நாளை சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்புப் போராட்டம் நடத்துவது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் கறுப்புக்கொடி ஏற்றுவது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை தாம்பரத்தில் காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்ட பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து நடந்த மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில், "சென்னையில் 100 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவது, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது" எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.