தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான டாக்டர் அம்பேத்கார் மருத்துவ உதவித் திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்.சி.,எஸ்.டி.), டாக்டர் அம்பேத்கார் மருத்துவ உதவித் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் சில தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவ உதவி பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். சிறுநீரகம், கல்லீரல், மூளை, இருதயம் தொடர்பான நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளோர், மூட்டு அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவ சிகிச்சை பெறும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சான்றொப்பமிட்ட சிகிச்சைக்கான மதிப்பீடு ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மதிப்பீட்டு சான்றிதழில் அறுவைச் சிகிச்சைக்கான தேதி குறிப்பிடப்பட வேண்டும்.
விண்ணப்பத்தை நாடாளுமன்ற உறுப்பினர் (மேலவை/கீழவை) அல்லது மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட கலெக்டர், துணை ஆணையர், மத்திய, மாநில மக்கள் நல்வாழ்வு அல்லது சமூகநல செயலாளர் ஒப்பம் பெற்று விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குனர், டாக்டர் அம்பேத்கார் அமைப்பு, 15, ஜன்பாத், புதுடெல்லி என்ற முகவரிக்கு அறுவைச் சிகிச்சை அல்லது சிகிச்சைக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.
இந்த மருத்துவ உதவித் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரம்புக்குட்பட்ட சிகிச்சைக்கான செலவில் 75 சதவீதம் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு நேரடியாக அனுப்பப்படும். இதில் 50 சதவீதம் கோடிட்ட காசோலை, வரைவோலை அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக ஆஸ்பத்திரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மீதித் தொகை அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது மருத்துவமனை காப்பாளரின் சான்றொப்பமிட்ட இறுதி செலவுப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.