அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கும் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் அங்ககீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசின் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு நியமித்த நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டை போலவே சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 65-35 விழுக்காடும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50-50 விழுக்காடும் அரசு- நிர்வாக ஒதுக்கீடு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வசூலித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ரூ.62 ஆயிரத்து 500 ஐ கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அக்குழு கூறி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கு கட்டணம் ரூ.7,500 ஆகவே இருக்கும்.
நடப்பாண்டில் கலந்தாய்வு மூலம் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 80,000 பேருக்கு இடம் கிடைக்கும். இதில் 70,000 த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.32,500 தான் கட்டணம்.
இந்தக் கட்டண நிர்ணம் தொடர்பாக 2 முறை தோழமைக் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினேன்.
தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 65 விழுக்காட்டை விட்டுத்தரக் கூடாது என்றும் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் தோழமைக் கட்சியினர் வலியுறுத்தினர்.
இருந்தாலும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் தோழமைக் கட்சிகளிடையில் கருத்து வேறுபாடு நிலவியது.
இவையனைத்தையும், நீதிபதி பாலசுப்பிரமணியம் குழுவிடம் கூறினோம். குழுவும் பலரிடம் கருத்துக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
சில கல்லூரிகளில் நடைமுறை ரீதியாகச் சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. அதை நான் மறைக்கவில்லை, மறுக்கவும் இல்லை. தவறு செய்யும் கல்லூரிகள் மீது கடந்த முறை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தோம்.
இந்த ஆண்டு, தவறு செய்யும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யப் பல்கலைக்கழகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணமான ரூ.32,500 ஐ கலந்தாய்வு முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கட்ட ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு பொன்முடி கூறினார்.