ஆந்திரம், டெல்லி மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் சமையல் எரிவாயு மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான விற்பனை வரி, வாட் வரிகளை குறைத்து ஆந்திரா, டெல்லி முதலமைச்சர்கள் உத்தரவிட்டதன் வாயிலாக ஆந்திராவில் விலை முழுவதும் ரத்து செய்யப்பட்டு பழைய விலைக்கே சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கவும், டெல்லி மாநிலத்தில் விலை ரூ.10 மட்டுமே உயர்த்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் பரிசாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விற்பனை வரியை குறைத்திட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதை ஏற்று தமிழகத்தில் டீசல் மீதான விற்பனை வரியை 2 சதவீதம் குறைத்துள்ளார்.
இன்றைக்கு சோனியா காந்தியின் கோரிக்கையை ஏற்று ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று பெரிதும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.