தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதற்கு, மாநில அரசு விதிக்கும் விற்பனை வரியை குறைக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த காலத்தில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்தபோது, மாநில அரசு விதிக்கும் விற்பனை வரியை குறைக்க வேண்டும் எனக் கூறிய கருணாநிதி, அந்த உத்தியை இப்போது பயன்படுத்தி, மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியை போக்க உதவவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது கடும் கண்டனத்துக்குரியது. விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
பெட்ரோலியப் பொருள்கள் விலை உயரும் என்பதை கசியவிட்டு, விலை ஏற்றுத்துக்கு மக்களை ஆயத்தப்படுத்தும் நாடகத்தை மத்திய அரசு நடத்தியுள்ளது. பெட்ரோலிய விற்பனை முகவர்களுக்கு கமிஷன் தொகையை அதிகரித்து, அதையும் மக்கள் மீது சுமத்தினர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோது, அவற்றின் மீது விதிக்கும் விற்பனை வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்றார் கருணாநிதி. இப்போது, அந்த நடவடிக்கையை அவர் எடுக்கவேண்டும்", என்று கூறியுள்ளார்.