ஊட்டி- மைசூர் மலைப் பாதையில் 600 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை, 3 பெண்கள் உள்படி 11 பேர் பலியானதுடன் 48 பேர் காயமடைந்தனர்.
பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 3 பேர் மருத்துவமனையில் பலியானதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
ஊட்டியில் இருந்து மாயாருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, 20 கி.மீ தொலைவில் 31ஆவது கொண்டை ஊசி வளைவிற்கு அருகில் குறுகிய சாலையில் எதிரில் வந்த பேருந்துக்கு வழி விட்டபோது எதிர்பாராதவாறு பள்ளத்தில் உருண்டுள்ளதாகவும், விழுந்த வேகத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டதென்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 48 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வித்யா குல்கர்னி மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார். தமிழக அரசின் காதி அமைச்சர் டி.ராமச்சந்திரன் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.