சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை 'சேதுராம்' என்ற பெயரிலாவது நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று தனது 85ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை 'சேதுராம்' என்று பெயர் மாற்றியாவது நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியதாக அரசுச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
முதலமைச்சர் கருணாநிதிக்கு பிரதமர் தனது வாழ்த்தை தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னையில் நேற்று கூடிய தி.மு.க. பொதுக் குழுவிலும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கருணாநிதி விடுத்த பிறந்த நாள் செய்தியில், "இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் வழிவகுத்திடும் இந்தத் திட்டத்தை, "ராமன் பெயர் கூறி திட்டத்தையே தீர்த்துக் கட்டிவிடாமல் என் பிறந்த நாள் செய்தியாகவே வேண்டுகோள் ஒன்று விடுக்கின்றேன்.
வேண்டுமானால்; "சேதுராம்'' திட்டமென்றே பெயரிடுக! வெறுப்பு விருப்பு கடந்து நாடு வாழ்வதற்கும் நலிவு தீர்வதற்கும் நான் தெரிவிக்கும் பிறந்த நாள் செய்தி இது!'' என்று கூறியிருந்தார்.