"கல்வியறிவற்ற கோடிக்கணக்கான பாமர மக்களும் நீதிகோரி உயர் நீதிமன்றங்களை அணுகும் நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வழங்குவதை அந்தந்த மாநில நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348(2) இந்தி உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளையும் உயர் நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால், தீர்ப்புகள் ஆணைகள் உள்ளிட்டவை ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
ஆனால், சமீபத்தில் மத்திய அரசின் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது பரிந்துரையில், இந்தி மொழியை நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், ஆணைகளுக்கும் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்து, அப்பரிந்துரையை சட்ட அமைச்சகம் இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பிக் கருத்து கோரியுள்ளது.
ஏற்கெனவே தமிழக முதல்வர் கலைஞர் தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை உயர் நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் மற்ற மாநில ஆட்சி மொழிகளை புறக்கணித்துவிட்டு இந்தி மொழியை மட்டுமே உயர் நீதிமன்ற மொழியாக ஏற்பது இந்தியாவில் உள்ள பிறமொழி பேசும் மக்களுக்குத் தீங்கிழைப்பதாகும்.
இந்நிலையில், தமிழகத்தைச் சார்ந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்து இப்பரிந்துரையின் மீது மேல்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் எனக்கோரி மனு அளித்துள்ளனர்.
பிரதமரும் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.
கல்வியறிவற்ற கோடிக்கணக்கான பாமர மக்களும் நீதிகோரி உயர் நீதிமன்றங்களை அணுகும் நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வழங்குவதை அந்தந்த மாநில நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.