அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். முடித்தவர்கள் மேற்படிப்புப் படிக்க விரும்பினால் அவர்களுக்கு அசல் சான்றிதழ்களின் நகலைத் தர வேண்டும் என்று அரசின் சுகாதாரச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கின் விவரம் வருமாறு:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று உறுதி மொழிப் பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது.
அதன்படி படிப்பு முடித்த பின்னரும் மாணவர்களுக்கு அவர்களுடைய அசல் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் மேற்கொண்டு படிக்க இயலவில்லை என்று சிக்கல் எழுந்தது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "சான்றிதழ் இல்லாமல் மருத்துவ நிபுணத்துவம் படிப்பில் சேர முடியவில்லை. எனவே அசல் சான்றிதழ்களைத் தருவதற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சத்திய நாராயணன், உயர் படிப்பு படிக்க முன்வருபவர்களுக்கு அவர்களின் அசல் சான்றிதழ்களின் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை வழங்க வேண்டும். உயர் கல்வியில் சேரத்தான் இச்சான்றுகள் பெறப்படுகின்றன என்று மாணவர்களும் எழுதித் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.