பரம்பிக்குளம்- ஆழியாறு நீர்ப் பகிர்வுத் திட்டம் குறித்து தமிழக, கேரள அதிகாரிகளிடையில் நடந்த பேச்சு எந்தவித முடிவையும் எட்டாமல் முடிந்தது. சென்னையில் மீண்டும் கூடிப் பேச இருதரப்பு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளம் இடையிலான பரம்பிக்குளம்- ஆழியாறு நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதது தொடர்பாக இருமாநிலத் தலைமைச் செயலர்களும் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்தப் பேச்சில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, தற்போது நடந்த பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் சென்னையில் மீண்டும் கூடி பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் பற்றி விரிவான ஆலோசிக்க இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
முன்னதாக, இப்பேச்சு குறித்து கேரள நீர்ப் பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறுகையில், "தற்போது நடந்துள்ள பேச்சு கேரள அரசைப் பொறுத்தவரை ஆக்கபூர்வமாக இருந்தது" என்றார்.