தமிழக அரசுப் பணிகளில் சிறுபான்மையினருக்கு 7 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
இதுகுறித்து தமிழக அரசு வெளயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிறித்துவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தலா 3.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்து 15.9.2007 அன்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் விரைவில் களையப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மாநில நிர்வாக சீர்திருத்தக் குழுத்தலைவர் நீதியரசர் ராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மு. காசி விஸ்வநாதன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் ஸ்ரீதர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைச் செயலாளர், வாசு தேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது தொகுதி நான்கு போட்டித் தேர்வின் மூலம் நடத்தப்பட்ட தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவதில் சிறுபான்மையினருக்கு உரிய 3.5 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்க ஏதுவாக ஆணை பிறப்பித்துள்ளார். இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.