தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடத்திய 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புனித இக்னேஷியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ராம் அம்பிகை 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
ராம் அம்பிகை கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் 99 மதிப்பெண்களும், தமிழில் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
இதேப் பள்ளியைச் சேர்ந்த ராம ஸ்வாதிகா 493 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மாநில அளவில் இரண்டாம் இடத்தை நான்கு மாணவர்கள் பிடித்துள்ளனர். மத்திய சென்னையில் உள்ள புனித ரஃபேல்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா, நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி, வீரவநல்லூரில் உள்ள புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜோசஃப் ஸ்டாலின், பாளையங்கோட்டையில் உள்ள சரத்துக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சகீனா, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டி ஹான்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மருதுபாண்டியன் ஆகிய நால்வரும் 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
மதுரை செளராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி உமா பிரியா, சேலம் புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இந்து, கரூர் மாவட்டம் புளியூரில் உள்ள ராணி மெய்யமை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ், முசிரி அமலா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்ரி, பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரிஃபையா பேகம், கள்ளக்குறிச்சி ஏ கே டி மெமோ மேல்நிலைப் பள்ளி மாணவன் திருமால், செங்கல்பட்டு புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்லின் மெர்சி ஆகிய 8 மாணவர்கள் 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.