''பல வகையிலும் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிறிலங்கா கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 26 பேரை சிறிலங்கா கடற்படையினர் கடத்தி சென்றுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்புதான் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்ட 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு தவறி விட்டது. பல வகையிலும் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
ஆனாலும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசும் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் கருணாநிதியும் உடந்தையாக உள்ளார். இதனை கண்டித்து ம.தி.மு.க. மக்கள் சக்தியை திரட்டி போராடும் என்று வைகோ கூறினார்.