தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பஞ்சாப் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக டெல்லியிலிருந்து கோதுமையை கொள்முதல் செய்கிறது என்று உணவு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த 2007 ஏப்ரல் 14ஆம் தேதி முதல் தமிழக அரசு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை மாவு ஆகிய பொருட்கள் குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசின் சிறப்பு ஒதுக்கீடு கோதுமையினை கொண்டு தமிழக அரசு ரவா, மைதாவினை பொது விநியோகத் திட்டத்தில் வழங்கி வந்தது. கோதுமை சிறப்பு ஒதுக்கீட்டினை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. எனவே சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரவா, மைதா போன்ற பொருட்களைத் தொடர்ந்து வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அதற்கிணங்க மாதந்தோறும் 10,000 மெட்ரிக் டன் கோதுமையை பஞ்சாப் மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்திட அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பஞ்சாப் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக டெல்லியிலிருந்து கோதுமையை கொள்முதல் செய்து தமிழகத்திலுள்ள ஆலைகளில் அரவை செய்து, ரவா, மைதா போன்ற பொருட்களை பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.