தூத்துக்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்று என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் எஸ்.ஜெயராமன் தெரிவித்தார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2007-08ம் ஆண்டில் என்.எல்.சி. நிறுவனம் ரூ.2981.65 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 41 விழுக்காடு அதிகம். இந்த ஆண்டின் நிகர லாபம் ரூ.1101.57 கோடி. இது கடந்த ஆண்டைவிட 94 விழுக்காடு அதிகம்.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பழுப்பு நிலக்கரி அளவான 21.586 மில்லியன் டன் என்பது நிறுவன வரலாற்றில் அதிகபட்ச உற்பத்தியாகும்.
நெய்வேலி 2-ம் சுரங்கத்தின் உற்பத்தி அளவான ஆண்டுக்கு 10.5 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரியை, ரூ.2161.28 கோடி செலவில் 15 மில்லியன் டன்னாக அதிகரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் உற்பத்தி தொடங்கும்.
தூத்துக்குடியில் நிலக்கரியை பயன்படுத்தி 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் நிலையங்கள் அமைக்க 12.5.2008 அன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ.4,900 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்பணிகள் நடந்து வருகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 55 விழுக்காடு தமிழகத்தின் பங்காக இருக்கும்.
நிலக்கரி சாம்பலில் இருந்து இயற்கை உரத்தினை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வது தொடர்பாக தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். தமிழ்நாட்டின் மின் தேவையில் 15 விழுக்காட்டை என்.எல்.சி. நிறுவனம் பூர்த்தி செய்கிறது என்று ஜெயராமன் கூறினார்.