10ஆம் வகுப்பு தேர்வு முடிவு எந்த தேதியில் வெளியாகும் என்ற தகவல் நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் முதல் தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 980 மாணவ- மாணவிகள் எழுதினர். அவர்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 2 ஆயிரத்து 361 பேர் மாணவிகள். மேலும் தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினார்கள். மொத்தத்தில் 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
இந்தநிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவு போல் இந்த ஆண்டு முன்னதாகவே வெளியிடப்பட்டது. அதேபோல் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு எந்த தேதியில் வெளியாகும் என்ற தகவல் நாளை (28ஆம் தேதி) அறிவிக்கப்படும் என்றார்.