''முடிவை மாற்றிக் கொள்வதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், ஜெயலலிதா எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு விமர்சனங்களை எடுத்துக்கூறும் நல்ல வாய்ப்பை அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயன்படுத்த தவறிவிட்டார். ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி ஏதேதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத காரணங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்த 'கீறல் விழுந்த கிராமபோன் தட்டுக்களின் குரலை' கருணாநிதி பதவியேற்ற அடுத்த நாளிலிருந்தே ஜெயலலிதா பாடி வருகிறார்.
இவரது நாளுக்கொரு போராட்டத்தை மக்கள் எப்படி அலட்சியப்படுத்தி வருகிறார்களோ அதுபோலவே தான் இதையும் லட்சியம் செய்யப்போவதில்லை.
மணல் குவாரி பற்றி ஏல டெண்டர் விடுவதை முடிந்த முடிவாக்கி ஆணைகள் எதையும் அரசு வெளியிடவில்லை. ஒரு யோசனையாகத்தான் அதனை தெரிவித்தது. அதனை மாற்றிக் கொண்டால் கூட அதில் தவறு என்ன? இதில் வெற்றி, தோல்வி எங்கே வந்தது?
முடிவை மாற்றிக் கொள்வதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், ஜெயலலிதா எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.