சொத்து வரி கணக்கை காட்டவில்லை என்று கோரி வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய ஜெயலலிதாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
1993-94ஆம் ஆண்டுக்குரிய சொத்து வரி கணக்கை காட்டவில்லை என்று வருமானவரித்துறை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் 1997ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் 2008 பிப்ரவரி 25ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை பொருளாதார குற்றவியல் நீதிமன்ற சாட்சிகளை விசாரிக்கவும், மேற்கொண்டு விசாரணை நடத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு வருமானவரித்துறைக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.