லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரங்கள் திடீரென இயங்காமல் போனதால் விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் 247 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தது. அதில் 247 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் அதிகாலை 3.20 மணிக்கு தரை இறங்க வேண்டும். இதற்காக 3 மணியளவில் விமானி விமானத்தில் சோதனை செய்தார்.
அப்போது விமானத்தின் சக்கரங்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி உடனடியாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர், தீயணைப்பு படையினர் தயாராக நிறுத்தப்பட்டனர். பின்னர் விமானத்தை தரையில் இறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 90 நிமிடத்திற்கு பிறகு அதிகாலை 4.30 மணிக்கு விமானத்தை விமானி தரை இறக்கினார். இதனால் 247 பயணிகளும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.
அதன்பிறகு விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது.