ஆலமர ஜோதிடர்களை நம்பியதே, கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏற்றாததற்கு முக்கிய காரணம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 2004-ம் ஆண்டு தேர்தலைவிட காங்கிரஸ் 15 இடங்களை கூடுதலாக பெற்ற போதிலும், பா.ஜ.க.வைவிட அதிக இடங்களை பெறத் தவறியதால் கர்நாடகத்தில் காவிக் கறையை ஆட்சிப் பீடத்தில் ஏற்றியுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றபோது, தேவகவுடா குடும்பத்தினருக்கு எதிராக பெண் வேட்பாளர்களை நிறுத்தினால், அவர்களை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று ஜோதிடர்கள் கணித்ததை காங்கிரஸ் கட்சி ஏற்றது.
அதன்படி, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை எதிர்த்து ராமகிருஷ்ண ஹெக்டே மகள் மம்தாவை நிறுத்தியும், மற்றொரு மகனான ரேவண்ணாவுக்கு எதிராக பெண் வேட்பாளர் அனுபமாவை நிறுத்தினார்கள். ஆனால், காங்கிரஸ் பெண் வேட்பாளர்கள் எளிதில் தோற்றுவிட்டனர்.
அரசியல் கொள்கைகளை செயல்படுத்தவும், மக்களிடம் செல்வாக்குப் பெற்று தொண்டால் சிறந்தவர்களையும் தேர்வு செய்வதை விடுத்து, ஆலமர ஜோதிடர்களை நம்பியதே, கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏற்றாததற்கு முக்கிய காரணம் ஆகும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.