''கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு புதிய கர்நாடக அரசு இடைஞ்சலாக இல்லாமல் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பேரியக்கம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 2004ஆம் ஆண்டை விட 15 இடங்கள் கூடுதலாக பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆட்சிக்கு வர இருக்கும் பாரதிய ஜனதா கட்சி அண்டை மாநிலமான தமிழக மக்களின் ஜீவாதார உரிமைப் பிரச்சனைக்கு விரோதமாக இருந்துவிடக் கூடாது. அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் கூட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற தேசியவாதியான எடியூரப்பா தடையாக இருக்க மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார். அக்கருத்தை வரவேற்கிறேன்.
எனவே கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு புதிய கர்நாடக அரசு இடைஞ்சலாக இல்லாமல் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அத்திட்டம் தமிழகத்திற்கு உரிமையானது என்ற கடந்தகால வரலாற்றை மறந்துவிடக் கூடாது. கர்நாடக மாநில அரசாலேயே ஏற்கப்பட்டது என்பதையும் புறக்கணித்து விடக் கூடாது.
கர்நாடக மாநில அரசாலேயே ஏற்கப்பட்டது என்பதையும் புறக்கணித்து விடக் கூடாது. அதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மாநில உறவைப் பேணிக்காத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.