கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் கிராமத்தில் ஒரு வெடிமருந்து கிடங்கில் இருந்த 17,000 டெட்டனேட்டர்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் புன்னம்சத்திரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் வெடி மருந்து கிடங்கின் பூட்டை உடைத்து அங்கிருந்த வெடிமருந்து பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் முருகேசன் புகார் செய்தார்.
இதையடுத்து காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்கள் வெடிமருந்து குடோனில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் வெடிமருந்து பெட்டிகளை உடைத்து அதில் இருந்த வெடி பொருட்களை மட்டும் எடுத்து விட்டு, காலிப்பெட்டிகளை அங்கேயே போட்டு விட்டு சென்று உள்ளனர்.
அந்த காலிப்பெட்டியில் இருந்த விரல்ரேகைகளையும் நிபுணர்கள் பதிவு செய்தனர். அந்த இடத்தில் மதுபான பாட்டில்கள் கிடந்தன. எனவே திருடர்கள் இரவில் அந்த இடத்தில் வைத்து மதுபானம் அருந்திவிட்டு வெடிபொருட்களை எடுத்து சென்று இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 17 ஆயிரம் டெட்டனேட்டர்கள் கொள்ளை போய் உள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகவேல் கூறுகையில், மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். டெட்டனேட்டர்களை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.