கோவை மாவட்டம், உடுமலை திருமூர்த்தி மலையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் 13 பேர் பலியானார்கள்.
கோவை மாவட்டம், உடுமலையை அடுத்து உள்ளது திருமூர்த்தி மலை. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவிலும், பஞ்சலிங்க அருவியும் உள்ளது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திருமூர்த்தி மலைக்கு வருவது வழக்கம்.
நேற்றும் திருமூர்த்தி மலை அருவி பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் கோவையை சேர்ந்த 6 பேரும், சேலம், புதுச்சேரியில் இருந்து 8 பேரும் திருமூர்த்தி மலைக்கு குளிக்க வந்துள்ளனர். மாலை 3 மணிக்கு அருவியில் அவர்கள் குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அருவியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் 13 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் பாறை இடுக்குகளில் இறந்து கிடந்த 4 பெண்கள், ஒரு வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். அவர்களின் பெயர் அன்னலட்சுமி (25), கலாராணி (22), ரமாதேவி (26) தாமரை செல்வி (15), கிசோனா (1) என்று தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வு பற்றி அறிந்ததும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிக்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து ஆட்சித்தலைவர் கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு 3 பேர் இதே அருவியில் குளிக்கும் போது உயிரிழந்தனர் என்றார்.