காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஏழை பெண்கள் நிதியுதவி பெற வருமான உச்சவரம்பை உயர்த்திய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பயனடையும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழை விதவைப் பெண் குழந்தைகள் திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களின் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய அமைப்புகளின் மூலம் ஏழைப் பெண்கள் நிதி உதவிப் பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை தற்போது 24 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது.
சிவகாமி அம்மையார்நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்கள் நிதி உதவிப் பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 12 ஆயிரமாகவும், மேலும் குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபர் இறந்து விட்டால் துயர் துடைப்பு நிதியுதவிப் பெறுவதற்கு 7,200 ரூபாய் என்ற உச்சவரம்பும் கூட 24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு விடுத்திருந்த மேற்கொண்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த உச்சவரம்பை தமிழக அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. இதன்மூலம் ஏழை, எளியப் பெண்கள் பெரிதும் பயனடைவார்கள். அவர்களது வாழபுவில் இந்நடவடிக்கை ஒரு ஒளிவிளக்கு. எனவே முதல்வரை பாராட்டுகிறேன். நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.