தாம்பரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உட்பட 50 வணிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தாம்பரம் ராமகிருஷ்ண ஐயர் தெருவில் கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டுவருகிறார் வீரராகவன். இவரது கட்டடத்தில் லோகநாதன் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் கீழ்ப்பகுதியை காலி செய்யுமாறு லோகநாதனிடம் வீரராகவன் கூறியுள்ளார்.
ஆனால் கடையின் கீழ்பகுதியை காலி செய்ய லோகநாதன் மறுத்துவிட்டார். இதனால் வீரராகவனின் ஆதரவாளர்கள் கடையில் இருந்த துணிகளை வெளியே வீசிவிட்டு கடைக்கு பூட்டு போட்டுள்ளார்.
இந்தநிலையில் லோகநாதனுக்கு ஆதரவாக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தனது ஆதரவாளர்களுடன் சென்று அந்த கடைக்கு வேறொரு பூட்டை போட்டுள்ளார். அந்த பூட்டை வீரராகவன் அகற்றிவிட்டு மற்றொரு பூட்டை போட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் காவல்துறையினர் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து லோகநாதன், வீரராகவன் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதற்கிடையே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வெள்ளையன் அறிவித்தார். இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக வெள்ளையன் கூறினார். அதன்படி இன்று காலை வெள்ளையன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிகழ்வால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.