தன்னிச்சையான முடிவுகளால் தமிழக மக்களை தொடர்ந்து அவமானப்படுத்தி கொண்டிருக்கும் கருணாநிதி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் தகுதி இல்லை என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையே மதிக்காமல் செயல்படுவது முதலமைச்சர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும்.
இப்படிப்பட்டவர் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப் போகின்ற முடிவை மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை அ.இ.அ.தி.மு.க.வுக்கு இல்லை. மணல் குவாரிகளில் மணலை எடுத்து விற்பனை செய்வதை பரவலாக்கவும், கூடுதல் கண்காணிப்பை உறுதி செய்யவும், குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி மற்றும் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ய அதிகாரம் வழங்குவது என்று 19.5.2008 அன்று கருணாநிதி தன்னிச்சையாக அறிவித்தார். இது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
கருணாநிதியின் இந்த திடீர் அறிவிப்புக்கு அ.இ.அ.தி.மு.க.வும், மைனாரிட்டி தி.மு.க அரசை தாங்கி பிடிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தவுடன் ஒரு சமாளிப்பு நடவடிக்கையாக தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் என்ற ஒரு கண்துடைப்பு நாடகத்தை முதலமைச்சர் நடத்தி இருக்கிறார்.
தன்னிச்சையான முடிவுகளால் தமிழக மக்களை தொடர்ந்து அவமானப்படுத்தி கொண்டிருக்கும் கருணாநிதி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் தார்மீக உரிமையை என்றோ இழந்து விட்டார். அதற்கான தகுதி முதலமைச்சருக்கு இல்லை.
அ.இ.அ.தி.மு.க.வின் கருத்து ஏற்கனவே எனது அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே ஆற்று மணல் விற்பனை விவகாரம் தொடர்பாக தி.மு.க அரசு 26ஆம் தேதி கூட்டவிருக்கும் தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அ.இ.அ.தி.மு.க புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.