மேடைக்கலையிலும், படைப்புக்கலையிலும் சிறந்து விளங்கிய திருச்சி, சென்னையை சேர்ந்த இரு சிறுவர், சிறுமிகளுக்கு மத்திய அரசின் தேசிய விருது கிடைத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளந்திரு என்னும் விருதை மேடைக்கலை, அறிவியற் கலை, படைப்புக் கலை, எழுத்துக்கலை ஆகியவற்றில் புதுமை படைத்திடும் திறமையுடைய சிறார்களுக்கு வழங்குகிறது. இந்த விருது குடியரசுத் தலைவரால் டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து வழங்கப்படுகிறது.
2007 ஆம் ஆண்டிற்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் இந்திய அளவில் இளந்திரு விருதை வென்றுள்ளனர். திருச்சி ஜவகர் சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த சிறிநிதி மேடைக்கலைக்காகவும், சென்னை ஜவகர் சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த சுவேதா விஸ்வகர்மா படைப்புக் கலைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படவுள்ளது.
தமிழகத்திலுள்ள ஜவகர் சிறுவர் மன்றப் பள்ளிகள் மாவட்ட அளவில் நடனம், இசை, கணினி, கீபோர்டு, தையல், ஓவியம், கைவினை, ஜிம்னாஸ்டிக், கராத்தே, சிலம்பம், போன்ற பல்வேறு விதமான கலைகளில் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
மாணவர்கள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்று, திறன்களை வளர்த்துக்கொண்டு, இச்சிறுவர்களைப் போல இளந்திரு விருதைப் பெற்று நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்று சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை கேட்டுக்கொள்கிறது என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.