ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயினை சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு கடத்த முயன்ற பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெர்யல் ரெயானா (28) என்பவர் நேற்றிரவு சென்னை மீனம்பாக்கம் அண்ணா விமான நிலையத்திற்கு வந்தார். மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூருக்கு செல்வதற்காக வந்த அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவரை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பின்னர் அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்தனர். அப்போது அதன் அடியில் 3 கிலோ ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்தனர். சர்வதேச அளவில் இவற்றின் மதிப்பு ரூ.3 கோடியாகும்.
பின்னர் அவரை விமான நிலைய காவல்துறையினரிடம் சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோலாலம்பூரில் இருந்து மும்பை வழியாக டெல்லி சென்று ஹெராயினை வாங்கியதாகவும், இந்த ஹெராயினை சென்னை வழியாக மலேசியாவுக்கு கடத்தி சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்க கொண்டு செல்வதாகவும் தெரியவந்தது.
கடந்த மாதத்தில் போதை பொருள் கடத்திய தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிடத்தக்கது.