ஆற்றுப்படுகையில் மணலை அள்ளி விற்பனை செய்வதை ஏல முறை மூலம் தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறு ஆய்வு செய்யவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மணல் எடுத்து விற்பனை செய்வதில் நீண்ட காலமாக முறைகேடுகள் நடைபெறுகிறது. மணல் விற்பனை தனியார் பொறுப்பில் நடைபெற்றபோதும் சரி, அரசே ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னரும் சரி, முறைகேடுகளும், கொள்ளையும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க முனைந்த வருவாய்த்துறை அலுவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், ஏல முறையில் மணல் விற்பனையை தனியாருக்கு ஒப்படைப்பது பிரச்னைக்குத் தீர்வாகாது. எனவே, மணல் விற்பனையை அரசுத் துறையிலேயே தொடர்ந்து நடத்தவேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனம் போன்ற மாநிலப் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் விற்பனையை நடத்தவேண்டும். மணல் விலையை அரசே நிர்ணயிக்கவேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்காமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மணல் அள்ளுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மணல் குவாரிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மணல் விற்பனை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று வரதராஜன் கூறியுள்ளார்.