சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அக்னி வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இம்மழை சற்று ஆறுதலைத் தந்தது.
தமிழகத்தில் கடந்த மே 3 முதல் நாட்களாக அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. சராசரி வெப்பநிலை 40 டிகிரியைத் தொட்டதால் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர். இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் இன்று மாலை திடீரென்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த மழையினால் வெப்பம் ஓரளவு தணிந்து மக்கள் ஆறுதலடைந்தனர். சில இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
வழக்கமாக கோடை காலத்தில் நீர் வற்றிக் காணப்படும் மேட்டூர் அணையின் நீர் மட்டம், இந்த ஆண்டு 96 அடிக்கும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தஞ்சை, திருவாரூர் மாவட்ட விவசாயிகளும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.