பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் தலைசிறந்த பள்ளிகளில் படிக்க தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் பயின்று 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சார்ந்த திறன் மிக்க மாணவ, மாணவியர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயில அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் 2007-2008 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்ட திட்டம் 2008-09 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் விரும்பும் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து பிளஸ் 1 பயில ஆண்டொன்றுக்கு ரூ.28,000க்கு மிகாமல் இரண்டாண்டுகளுக்கு மொத்தம் ரூ. 56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். தலைசிறந்த பள்ளிகளில் சேர்ந்து பயில்வதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறித்துவர் மற்றும் முஸ்லிம்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவராவர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்படவிருப்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.