தமிழகத்தில் விஷசாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் ஒரே சமயத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலம், கோலார், பெங்களூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 70 பேர் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கணிக்கோட்டை, பிள்ளமங்களம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 30 பேர் விஷச்சாராயம் குடித்து பலியாகி இருக்கிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட 30 பேர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு கண் பார்வை போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலர், உயிருக்கு போராடி வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கள்ள சாராயம் விற்ற பார்வதி, அவரது கணவர் கிரிஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ள சாராயத்தை தடுப்பது தொடர்பாக இரு மாநில காவல்துறை அதிகாரிகள் ஓசூரில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.