ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரண உதவி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த கீழ ஈசானூர் கிராமத்தைச் சேர்ந்த சாமியப்பன் என்பவரின் மகன் ரமேஷ்குமார் தாம் வேலை பார்த்த குவைத் நாட்டு நிறுவனத்தின் மூலம் ஈராக் நாட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கெங்காதரன் என்பவரின் மகன் செந்தில் என்பவர் தனியார் நிறுவனத்தின் மூலம் ஈராக் நாடு சென்று டீசல் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இந்த இரண்டு பேரும் ஈராக்கில் மே 8ஆம் தேதி அன்று தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வு குறித்து அறிந்ததும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.