அமைச்சர் பூங்கோதை ராஜினாமாவை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றிய தமது உறவினர் ஜவஹர், லஞ்சம் பெற்றதற்காக நடவடிக்கைக்கு ஆட்பட்டு இருக்கும் நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் அமைச்சர் பூங்கோதை ஈடுபட்டதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், இதில் அரசின் நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, அமைச்சர் பூங்கோதை தவறை உணர்ந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார். நான் இந்த ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன் என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் பூங்கோதையின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் கருணாநிதி இன்று ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து துறைகளை மாற்றி அமைத்துள்ளார். அமைச்சர் பூங்கோதை வசித்து வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கீதா ஜீவனிடம் இருந்த கால்நடைதுறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.