திம்பம் மலைப்பாதையில் கரும்பு மற்றும் மரம் ஆகிய பாரங்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் பதினைந்து மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. பண்ணாரியில் இருந்து பத்து கி.மீ., தாண்டி இருக்கும் இந்த பாதை இருபத்தி ஏழு கொண்டைஊசி வளைவுகளை கொண்டதாகும். இது தேசியநெடுஞ்சாலை 209 ஆகும். மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் காணப்படும்.
இந்த கொண்டைஊசி சாலையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. இப்படி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்படும்போது நூற்றுக்கு மேற்பட்ட பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நிற்கும். இதனால் பேருந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
நேற்று தாளவாடியில் இருந்து கரும்பு ஏற்றிவந்த லாரி ஒன்று இருபத்தி மூன்றாவது வளைவில் கவிழ்ந்தது. இதை தொடர்ந்து மரம் ஏற்றிவந்த லாரி ஒன்றும் கவிழ்ந்தது. இதனால் பதினைந்து மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போக்குவரத்து பாதிப்பால் பேருந்து பயணிகள் உணவு, நீர் இன்றி கடும் அவதிபட்டனர்.
இது குறித்து இந்த வழியாக பயணம் செய்யும் பேருந்து பயணிகள் கூறுகையில், இந்த சாலையில் அதிகமாக விபத்து ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். அதிகபாரம் ஏற்றிவந்த லாரிகள் மட்டுமே இங்கு கவிழ்கிறது. ஆகவே அதிகபாரம் ஏற்றிவரும் லாரிகளை ஆசனூரிலேயே தடுத்து நிறுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும் என்றனர்.