ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவேண்டும் என சத்தியமங்கலத்தில் நடந்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சமுதாய எழுச்சி மற்றும் அரசியல் விழப்புணர்வு மாநாடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அஞ்சுமன் டிரஸ்ட் மைதானத்தில் நடந்தது. மாநாட்டிற்கு ஈரோடு மாவட்ட தலைவர் சையத் அஹமத் பாரூக் தலைமை தாங்கினார். ஹாபிழ் காரி ஷபீக் ஆலம் சாஹிப் கிராஅத் ஓதி மாநாட்டை தொடங்கி வைத்தார். சத்தி நகர தலைவர் சாதிக்பாட்ஷா அனைவரையும் வரவேற்றார்.
மாநாட்டிற்கு த.மு.மு.க. மாநில பொதுசெயலாளர் ஹைதர்அலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், காவல்துறை இன்னமும் திருந்தவில்லை. முஸ்லீம் அப்பாவிகளை பிடித்து பொய் வழக்கு போடுகின்றனர். காவல்துறை கண்ணியத்தோடு நடப்பதில்லை. முஸ்லீம் மக்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது போராட்டம் மூலம் தீர்வு காணவேண்டும் என்றார்.
பின்னர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அகில இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உடனடியாக இடஒதுக்கீடு வழங்க மத்தி அரசை வலியுறுத்துவது.
தங்கம் உள்ளிட்ட பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவேண்டும்.
வேலூர் கோட்டையில் உள்ள நவாப் பள்ளிவாசலை முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்காக உடனடியாக திறந்துவிடவேண்டும்.
சிறையில் உள்ள குணங்குடி ஹனீபா உள்ளிட்ட முஸ்லீம் கைதிளை விடுதலை செய்யவேண்டும்.
சத்தியில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை தாமதப்படுத்தும் சங்பரிவார திகளை கண்டிப்பதோடு இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டது.