ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களின் பிரச்னை குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது தமிழக அரசு கூறியுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களை அகற்றக் கூடாது என்றும், போராட்டம் நடத்துவது குறித்தும் ஏரிகளில் குடியிருக்கும் மக்களின் பிரச்னை பற்றியும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி, உள்துறை, நிதித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தற்போது, ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டு - அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.
அப்படி அகற்ற முயற்சிக்கிற நேரத்தில் அங்கே வாழும் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவு இருப்பதைத் தெரிந்தோ, தெரியாமலோ போராட்டம் நடத்தும் மக்களுக்குசில அரசியல் கட்சிகளும் துணை போகிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், அந்த ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்து வாழ்கிற ஏழை மக்களுக்கு உதவ அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் நீதி மன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுகின்ற முறையிலும் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வது என்பதைப் பற்றி கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசின் சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் குழு உடனடியாக அமைக்கப்பட உள்ளது.
அந்தக் குழுவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து பிரச்னையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பார்கள். அது வரையில் எந்தக் கிளர்ச்சியிலும் ஈடுபடாமல் அங்கு வாழும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.