தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கள்ளச்சாராயத்தைக் காய்ச்சியவர்கள், விற்றவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பின்னமங்கலம் கிராமத்தில் மட்டும் கள்ளச்சாராயத்திற்கு 16 பேர் பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 18 பேரும், கோலாரில் 24 பேரும் பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள சிலருக்கு கண்பார்வை மங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோலார் மாவட்டம் ஆனைக்கல்லை அடுத்துள்ள கல்பள்ளி என்ற இடத்தில் பெருமளவுக்கு சாராயம் காய்ச்சப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமிழகத்தில் எல்லை பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாராயத்தில் போதையை அதிகரிக்க எத்தனால் என்னும் ரசாயனத்தை அதிகமாக சேர்த்ததால் சாராயத்தில் விஷத்தன்மை ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
கள்ளச்சாராய சாவுகளை அடுத்து கர்நாடக மாநில டி.ஜி.பி. ஸ்ரீகுமார் உத்தரவின் பேரில், நடந்த அதிரடி சோதனையில் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்தவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்திலும், தமிழகத்திலும் கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் பலியான சம்பவம் இரு மாநிலங்களிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.